“மாவட்டங்களில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள், கூட்டங்களுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும் இணைத்துக் கலந்துரையாட வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட செயலர்களும் இணைத்தலைவர்களும் ஏற்பாடு செய்யவேண்டும்” என வடமாகாண முன்னாள் உறுப்பினர்கள் அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் அமையம் கடந்த (30) ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜாவின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த அமையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 19 பேர் கலந்துகொண்டனர்.

குறித்த அமையம் தொடர்பில் அதன் இணைப்பாளரான வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் அமையம், மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு சரியான முறையில் தளத்தினை அமைப்பதும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.

அதிகாரப் பகிர்வு வேண்டி நிற்கும் சமூகம் மத்திய அரசின் செயற்பாடுகளை மட்டும் பின்பற்றி நிற்காமல் மாகாண சபைக்குள்ள அதிகாரகள் வலியுறுத்தப்பட்டு அவை சம்பந்தமான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்காகவும் இது உருவாக்கப்ப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசியல் நிலையில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி செயற்படும் நோக்கிலும் இது அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள், கூட்டங்களுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும் இணைத்துக் கலந்துரையாடவேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களும் இணைத்தலைவர்களும் ஏற்பாடு செய்யவேண்டும்.

அண்மையில் இடம்பெற்ற நியமனங்களின் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்றம் பற்றி அறிவிக்கப்பட வேண்டும். ஏற்கனவே வடமாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அமுலாக்கல் பற்றியும் அதனை மீளாய்வு செய்து தொடர்ந்து கையாள்வதற்காக இந்த அமையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் நிறைவேற்று செயற்பாடு தொடர்பில் இணைப்பாளராக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், பொருளாளராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், செயற்குழு உறுப்பினர்களாக கிளிநொச்சி மாவட்டத்துக்கு த.குருகுலராஜா, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு து.ரவிகரன், க.சிவனேசன், ஏ.எல்.வை.ஜவாகிர் மன்னார் மாவட்டத்துக்கு பா.டெனீஸ்வரன், ஜனாப் நியாஸ் யாழ். மாவட்டத்துக்கு சி.தவராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், வவுனியா மாவட்டத்துக்கு ஜி.ரி.லிங்கநாதன், ஏ.ஜெயதிலக ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்துக்கு வருகை தராத ஏனைய உறுப்பினர்களும் இந்த அமையத்தின் உறுப்பினர்களாக செயற்படுவர். இந்தக் குழு இரண்டு கிழமைக்கு ஒருதடவை சந்திப்பதென்றும் முழு உறுப்பினர்களும் மாதத்துக்கு ஒரு தடவை சந்தித்துக் கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது” என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.