அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளை வன்மையாக கண்டித்துள்ள வடகொரியா, இச்செயற்பாடு கொரிய தீபகற்பத்தை அணுவாயுத பாவனையற்ற பிராந்தியமாக மாற்றும் திட்டத்திற்கு தடையாக அமையும் என, வடகொரியா எச்சரித்துள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்பில் வடகொரிய அதிகாரிகள் மூவருக்கு எதிராக வொஷிங்டன் புதிய பொருளாதார தடைகளை அமுல்படுத்திய நிலையிலேயே வடகொரியா இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, வடகொரிய நிர்வாகம் புதிய அமெரிக்க பொருளாதார தடைகள் குறித்து அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியது.

தீவிர மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் இம்மூவருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கிம்-மின் உதவியாளரும் கொரிய தொழிற்கட்சியை வழிநடத்துபவருமான ராயோங் ஹே சோ, பாதுகாப்பு அமைச்சர் கியோங் தாக் ஜொங் மற்றும் விளம்பர மற்றும் தகவல் திணைக்கள தலைவர் க்வோங் ஹோ பக் ஆகியோருக்கு எதிராகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மூவருக்கு சொந்தமான அமெரிக்க அதிகார வரம்பிற்கு உட்பட்ட சொத்துக்களை முடக்குவதற்கும், அமெரிக்காவிலுள்ளவர்களுடனான பரிமாற்றங்களை தடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தடையானது வடகொரிய, அமெரிக்க தலைவர்களுக்கு இடையே கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் மூலமாக வலுவடைந்த இருதரப்பு உறவு பாதிப்படையக் கூடும் என விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Shares