மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழ்பூத்த கல்விமானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதரின் உடல் இன்று ஆலையடிச்சோலை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

93வயதில் காலமான பிரின்ஸ் காசிநாதர் 40 வருடங்கள் ஆசிரிய சேவை மற்றும் அதிபர் சேவையாற்றியவர்.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சேவையாற்றிய இவர், இறுதியாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபராக கடமையாற்றினார்.

மட்டக்களப்பின் தனிச்சிறப்பான பாடுமீன்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அது தொடர்பிலான தகவல்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவர் முதன்மையானவர்.

1986ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப்.ஊடாக பாராளுமன்றம் சென்ற இவர் 1990ஆம் ஆண்டுவரையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அளப்பெரிய சேவைகளையாற்றியுள்ளார்.

குறிப்பாக 1990ஆம்ஆண்டு இந்த நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்ட சமயங்களில், காசிநாதர் முன்முயற்சியெடுத்து அவர்களில் பலரை விடுதலை செய்வித்திருந்தார்.

பின்னர் அரசியலில் இருந்து விலகி சிவில் சமூக அமைப்புகளில் இணைந்து தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தைரியமாகவும் நேர்மையாகவும் தனது கடமையினை இறக்கும் வரையில் மேற்கொண்டுவந்த பிரின்ஸ் காசிநாதர் இறக்கும் வரையில் மட்டக்களப்பு கல்வி சமூகத்திற்கு தனது ஆலோசனையினையும் வழிகாட்டியாகவும் செயற்பட்டுவந்தார்.

பிரின்ஸ் காசிநாதர் நேற்று முன்தினம் இயற்கையெய்தினார். அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலை, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் பொறுப்பேற்று, ஊர்வலமாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.மயில்வாகனம், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட பெருமளவானோர் அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரையும் நிகழ்த்தினர்.

அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து மெதடிஸ்த திருச்சபையினரால் இறுதி கிரியைகளுக்கான பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டது. தொடர்ந்து ஆலையடிச்சோலைக்கு உடல் பாண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.

பெருமளவானோரின் அஞ்சலியுடன் உடல் ஆலையடிச்சோலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

0 Shares